எங்கள் வீட்டில் காஸ் சிலிண்டர் பதிந்து இருந்தோம். ஒரு மாதம் போனிலும் நேரிலும் சென்று விசாரித்த பிறகு வீட்டிற்கு சிலிண்டர் வந்தது. பிறகுதான் காரணம் புரிந்தது. ஒரு முறை அவர்கள் 25 ரூபாய் "டிப்ஸ்" குடுக்கவில்லை என்றால் அடுத்த முறை எப்படி உங்களுக்கு சிலிண்டர் வருகிறது என்று பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற பொழுது நாங்கள் வலை தளத்தில் புகார் செய்திருந்தோம். அன்று இரவே அவர் வந்து அந்த 25 ரூபாய் திருப்பி கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் அதை மனதில் வைத்து கொண்டு ஒவ்வொரு முறையும் பத்து இருபது நாள் கழித்து நாங்கள் பலமுறை அவர்களை அழைத்த பிறகு வந்து தருவார்கள்.
இந்த முறை வேறு ஒருவர் வந்தார். பாஸ்புக் இருந்தால்தான் சிலிண்டர் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு திரும்பி சென்று விட்டார். நாங்கள் அன்றே சென்று 45 ரூபாய் கொடுத்து பாஸ்புக் வாங்கி வந்தோம். அதில் 25 என்று குறிப்பிடபட்டு இருந்தது வேறு விஷயம்.
ஒரு வாரம் கழித்து அதே நபர் சிலிண்டர் எடுத்து கொண்டு வந்தார். பில் தொகை 393 ரூபாய். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தோம். 20 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டார், கொடுத்தோம். 100 ரூபாய் திருப்பி கொடுத்தார். 27 ரூபாய் எதற்கு என்று கேட்டதற்கு "சர்வீஸ் சார்ஜ்" என்று சொன்னார். அதற்கு ரசீது கொடுங்கள் என்று சொன்னதற்கு, நாங்கள் 15 கி.மி. தூரத்தில் இருந்து வெயில் மழையில் வந்து சிலிண்டர் போட்டு விட்டு செல்கிறோம். அதுற்கு "டிப்ஸ்" கொடுக்க மாட்டீர்களா? உங்களால் 25 ரூபாய் கொடுக்க முடியாது என்றால், இனிமேல் நீங்களே வந்து எங்கள் குடோனில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொலிவிட்டு சென்று விட்டார்.
"டிப்ஸ்" தருவது பற்றி எங்களுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் மிரட்டி கேட்கும் பொழுது கொடுக்க கூடாது என்று முடிவு செய்தோம். எரிவாயு ஒரு அத்தியாவசிய பொருள் என்ற காரணத்தினால் இப்படி மிரட்டி லாபம் அடைய பார்கிறார்கள். இந்த மாதிரி மிரட்டி சம்பாதித்தால் உடம்பில் ஒட்டுமா என்பது சந்தேகமே. எப்பொழுது இவர்கள் உணர்வார்களோ?